Home Archive by category

அமைச்சரவை மாற்றம்: புதியவர்களுக்கு ஸ்டாலின் கொடுக்கும் பரிசு

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் யார் யாருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும், யார் யாருக்கு கட்டம் கட்டப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியது. உதயநிதி ஸ்டாலின், சபரீசன் குறித்து வெளியான அந்த ஆடியோ திமுகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தொடர்ந்து திமுகவில் உள்ள சீனியர் அமைச்சர்கள் சிலரே தலைமையிடம் பிடிஆருக்கு எதிராக பேசத் தொடங்கினர்.

முதல்வரும் பிடிஆரை அழைத்து இது குறித்து விளக்கம் கேட்டார். முதல்வர் வீட்டிற்கே சென்று பிடிஆர் தனது விளக்கத்தை அளித்த போதும் ஸ்டாலின் திருப்தியடையவில்லையாம். ஆரம்பம் முதலே எதிர்தரப்பினர் பிடிஆரை குறிவைத்த நிலையில் அப்போதே ஸ்டாலின் அவரை அழைத்து தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க சொல்லியிருந்தார். தற்போது இந்த அளவுக்கு வந்திருப்பதை அவர் ரசிக்கவில்லை. இருந்த போதும் பிடிஆரை அமைச்சர் பதவியிலிருந்து இப்போதைக்கு மாற்றும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை என்கின்றனர் சித்தரஞ்சன் சாலை வட்டாரத்தினர்.

வேறு யாருடைய பதவிக்கு சிக்கல் என்று விசாரிக்கையில் வனத்துறையிலிருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் ராமச்சந்திரன் பெயரையும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயரையும் குறிப்பிடுகின்றனர்.

இருவரது துறை ரீதியான செயல்பாடும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையாம். அதுமட்டுமல்லாமல் சில புகார்களும் ஆதாரத்துடன் இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் இவர்களை மாற்றிவிட்டு புதியவர்களை அமைச்சரவைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இருந்தாலும் அவர்கள் மீது கை வைக்க முடியாது. இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தாலே மற்றவர்கள் தங்கள் பணிகளை சரியாக மேற்கொள்வார்கள் என்று காரணம் சொல்லப்படுகிறதாம்.

கயல்விழி இடத்தில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை கொண்டுவரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவையில் மொத்தமே இரண்டு அமைச்சர்கள் தான் அவர்களில் ஒருவரையும் தூக்கிவிட்டால் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழும். இதனால் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமாரை கொண்டுவரலாம் என்ற யோசனையும் உள்ளதாம்.

டெல்டாவுக்கு அமைச்சர் இல்லையே என்ற குரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. முதலமைச்சர் நானே டெல்டா காரன் தான் என்ற சமாதானம் எல்லாம் எடுபட்டதாக தெரியவில்லை. எனவே இந்த முறை கண்டிப்பாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கிறார்கள்.

சேலம் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திமுக எம்.எல்.ஏவான ராஜேந்திரன் பெயரும் அடிபடுகிறது.

இவர்களில் யாருக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது வாய்ப்பு வழங்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts