Home Archive by category

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவற்றுக்கு, குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, திருவாரூருக்கு நேரடியாகச் சென்று, கலைஞர் கோட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் எனவும், அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக, கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையை திறந்துவைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்புவிடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  டெல்லி செல்கிறார். விழுப்புரம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பும் முதலமைச்சர், உடனடியாக இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகைக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்வது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது, மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்டவை குறித்து குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. மேலும் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரை காலையில் சந்தித்த பின்னர், இரவு வரை டெல்லியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யக்கோரிய தீர்மானத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்த நிலையில், அவரையும் நேரில் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Posts