Home Archive by category

தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பிய பழமையான செப்பேடுகள்...! மயிலாடுதுறை அருகே பரபரப்பு

மயிலாடுதுறை அருகே சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேக பணிக்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன் சிலைகள், 462 தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகத்துக்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், யாகசாலை அமைப்பதற்காக மண்எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று மதியம் 2 மணியளவில் குழிதோண்டப்பட்டது.

அப்போது, 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட அரை முதல் 2 அடி வரை உள்ள 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுதவிர திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற 462 தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது.

அதனை தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டு எந்த காலத்துக்குரிய சிலைகள் என ஆய்வு செய்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை மண்டல ஆலோசகர்கள், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ஆகியோர் கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். சட்டை நாதர் கோயில் சிலையா? அல்லது வேறு கோயிலில் இருந்து சிலைகள் கொண்டு வந்து இங்கு புதைக்கப்பட்டதா? என ஆய்வு செய்தனர். இதுவரை எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் எனவும், 13ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிலைகள் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Related Posts