இராணுவ முகாமில் துப்பாக்கிசூடு -இரண்டு தமிழர்கள் உட்பட நால்வர் துடிதுடித்து பலி

இந்தியாவின் பஞ்சாப் இல் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இரண்டு தமிழர்கள் உட்பட 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள இராணுவ முகாமிலேயே நேற்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. ஆனால் உள்ளே பயங்கரவாதிகள் யாரும் இல்லை.
இதற்கிடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் நான்கு இராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25, சாகர் பன்னே (25) என்பது தெரிய வந்தது.
பீரங்கி படையை சேர்ந்த நால்வரும் சாப்பாட்டு கூடத்திற்கு பின்னால் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் கமலேஷ் தமிழக மாவட்டம் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும், யோகேஷ் குமார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த கமலேஷ், நெசவு தொழில் செய்யும் தந்தையின் இரண்டாவது மகன் ஆவார். திருமணம் ஆகாத கமலேஷ் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் இராணுவத்தில் சேர்ந்தார். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தான் அவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்து சென்றுள்ளார்.