ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகினர். இதையடுத்து, புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் நீங்கள் இந்தப் பதவியை ஏற்று இருக்கிறீர்கள். உங்களின் பதவிக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதுடன் இலங்கையின் அனைத்துக் குடிமக்களின் விருப்பங்களும் நிறைவேறும் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் நிறுவப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான தேடலுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.