Home Archive by category

இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார்

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஒடிசா பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக திரெளபதி முர்மு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் திரெளபதி முர்மு சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர். பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்து குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts