ஐந்தரை மணி நேரம் அதிர வைத்து கரையைக் கடந்தது மான்டேஸ்

வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய மான்டேஸ் புயல் ஒரு வழியாக மகாபலிபுரம் அருகே கரையை கடந்து தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த ஐந்தாம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து 7 ம் தேதியன்று புயலாக மாறியது. அதற்கு மான்டேஸ் எனப் பெயரிடப்பட்டது. அதன்பின்னர் புயலாக இருந்த அது தீவிரப் புயலாக உருவெடுத்து தமிழக கரையை நோக்கி நெருங்கி வந்தது. அது புயலாக உருவெடுத்த போதே வடக்கு கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்தது.
அத்துடன் புயல் நெருங்க நெருங்க மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ந்தேதி இரவு முதல் 10ந்தேதி அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெளிவாக அறிவித்திருந்தது. தமிழக அரசும் அதற்கு ஏற்ப பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி நேற்று இரவு சுமார் 9.45 மணி அளவில் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியது. முதலில் வெளிப்புறப் பகுதி கடந்த பின்னர் மையப்பகுதியும், அதன் பின்னர் வால் பகுதி என மூன்று கட்டங்களாக புயல் கரையை கடந்தது.
இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரம் பலத்த காற்றுடனும் கனமழையுடனும் புயல் கரையைக் கடந்தது. புயலின் மையப்பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது.
சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் முதல் 75 கி. மீ வேகம் வரையிலும் காற்று வீசியது. இதன் காரணமாக, சென்னை நகருக்குள் 300 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. அவற்றை மாநகராட்சி பணியாளர்கள் சுமார் 5000 பேர் உடனுக்குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், புயல் சேதங்களை சீரமைக்கும் பணியில் இன்று 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.