பீகாரில் பாஜக கூட்டணி உடைகிறதா?

2020-ம் ஆண்டில் பீகார் சட்டசபைத் தேதலில் வென்று ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. நிதிஷ்குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா பீகார் சட்டப்பேரவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக விமர்சித்து வருவதால் அவரை நீக்க வேண்டுமென நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறார்.
இதேபோல, ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பியான ஆர்.சி.பி.குமார் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் அவர் வகித்து வந்த மத்திய உருக்குத்துறை அமைச்சர் பதவி பறிபோனது. இதனால், அண்மையில் கட்சியில் இருந்து விலகிய அவர், ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கியக் கப்பல் என விமர்சித்தார்.
இதே போல ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், இதன் மூலம் பீகார் அரசு 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் முன்னரே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்பதால், ஐக்கிய ஜனதா தளம் ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளால் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் அதிகரித்தது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன், தங்களது கட்சியை பலவீனப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாகக் பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல், குற்றம் சாட்டினார். மேலும் தகுந்த நேரத்தில் அவர்களை அம்பலப்படுத்துவோம் என்றும் ராஜீவ் ரஞ்சன் கூறினார். இதனைத் தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டம், கடந்த 22-ம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெரும் நாளன்று நடைபெற்ற விருந்து, குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி ஆகிய 3 நிகழ்ச்சிகளிலும் நிதிஷ்குமார் பங்குபெறவில்லை.
பாஜக மீது அதிருப்தியில் உள்ள நிதிஷ்குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகு -தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மாற்று ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நிதிஷ் குமார் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுக்கு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசிக்கப்படுமோ என எதிர்பார்க்கப்படுகிறது.