ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நவம்பர் 11 தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய நவம்பர் 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, நவம்பர் 11ம் தேதியன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை அடுத்து, நளினி உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் நவம்பர் 11ம் தேதியன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ஆறு பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் தற்போது இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.