Home Archive by category

கட்டிடத்தை திறந்தது முதல்வர் ஸ்டாலின்... ஆனால் கல்வெட்டில் ஈபிஎஸ் பெயர்

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கட்டிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் இரவோடு இரவாகக் கல்வெட்டு வைத்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம், திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில் புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் புதிய தாலுகா அலுவலகம் செயல்படத் தொடங்கியது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கல்வெட்டு அந்த தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதே வேளையில் திசையன்விளை கால்நடை மருத்துவமனைக்கு அருகில் 3 கோடி ரூபாய் செலவில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு தாலுகா அலுவலக கட்டிடமும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது. அந்த தாலுகா அலுவலக கட்டிடத்தைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் இரவோடு இரவாக அந்த கட்டிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டைச் சிலர் பதித்துள்ளனர். இந்த தகவல் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த கல்வெட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். வருவாய்த் துறையினரின் புகாரின் பேரில், இது தொடர்பாக திசையன்விளை போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Posts