Home Archive by category

முக்கிய தலைவர் சுட்டுக்கொலை... பஞ்சாபில் தொடரும் பயங்கரம்

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் பகுதியில் உள்ள கோயிலுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வலதுசாரி தலைவரான சுதிர் சுரி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் நேற்று (நவ. 4) துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், அப்பகுதி மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது. 

இந்த கொலை குறித்து பஞ்சாப் காவல் துறை தலைவர் கௌரவ் யாதவ் கூறுகையில்,"அம்ரித்சரில் உள்ள கோபால் கோயில் நிர்வாகத்தை எதிர்த்து சுதிர் போராட்டம் நடத்தி வந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் உரிமம் பெற்ற துப்பாக்கியை (32-Bore Revolver) பயன்படுத்தி, சுதிரை சுட்டுள்ளார். இதில், சில குண்டுகள் சுதிர் மீது பாயந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். 

துப்பாக்கியால் சுட்ட நபரை சம்பவ இடத்திலேயே போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் சந்தீப் சிங் சன்னி என தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது, சுதிரின் பாதுகாப்புக்கு எத்தனை போலீசார் இருந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது அம்ரித்சரில் சூழல் கட்டுக்குள் இருக்கிறது" என்றார். 

கொலை செய்யப்பட்ட சிவ சேனா தக்சாலி என்ற உள்ளூர் வலதுசாரி அமைப்பின் தலைவராக உள்ளார். அப்பகுதியில் மிகவும் ஆக்ரோஷமானவராக அறியப்படும் அவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக, சீக்கிய அமைப்புகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆகியவற்றை தாக்கி பலமுறை பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கொலைக்கும், அவரின் சமூக வலைதள செயல்பாடுகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அப்பகுதியின் குண்டர்கள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அவருக்கு ஆபத்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவருக்கு  போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரை கொலை செய்த இடத்திலும் உள்ளூர் காவல் துறையினர் இருந்துள்ளனர். 

இருப்பினும், சுதிரை துப்பாக்கியால் சுட்ட நபர், இயல்பாக சுதிர் போராட்டம் நடத்தி வந்த இடத்திற்கு எதிரே இருக்கும் வீட்டின் முன்னே நின்று தாக்குதலை தொடுத்துள்ளார். கொலை செய்த நபர் சிலருடன் அங்கு காரில் வந்ததாகவும், ஆனால் அவர்கள் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாநில அரசின் மெத்தமான நடவடிக்கையும், பாதுகாப்பு குறைப்பாடுமே கொலைக்கு முக்கிய காரணம் என சுரியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Posts