தமிழகத்தில் 22 கட்சிகளுக்கு முகவரி கூட இல்லை: அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணைய அறிக்கை!
தமிழகத்தில் செயல்படாத 22 அரசியல் கட்சிகள் அடங்கிய பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் 30 நாட்களுக்கு அந்த கட்சிகள் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரட்டியது. தேர்தலில் பங்கு பெறாத கட்சிகள், வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகள், செயல்படாமலேயே உள்ள கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பட்டியலை மாநில வாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 22 கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அந்த கட்சிகள் 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த 22 கட்சி முகவரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்கள், அந்த இடத்தில் அலுவலகமே இல்லாததால் தேர்தல் ஆணையத்திற்கே திரும்பி வந்துள்ளது. 22 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதாலும், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதாலும், அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து அக்கட்சிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. மேலும் அதன் விவரங்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.