Home Archive by category

நளினி, ரவிச்சந்திரன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

 

 

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "இந்த வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார். அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயஸ் மற்றும் சாந்தன் ஆகியோரும் பேரறிவாளன் வழக்கை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, தங்கள் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிடப்பட்டது. அப்போது, தங்கள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு தேவையில்லை என்று நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவசரமாக வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Posts