Home Archive by category

காவிரி வெள்ள பெருக்கால் 31 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது- 4 ஆயிரம் பேர் மீட்பு

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வழக்கத்தை விட மிக அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பூர், ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 4 ஆயிரம் பேர் மீட்பு இந்த மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு 'செல்போன்' மெசேஜ் மூலம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தனர். வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். அவர்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டது. இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நீலகிரி, மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள 31 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 4,035 பேரை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.

இதில் 1,608 பேர் ஆண்கள், 1827 பேர் பெண்கள், குழந்தைகள் 600 பேர் உள்ளனர். இவர்கள் 1327 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதையும் படியுங்கள்: பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை மொத்தம் 49 முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் வருவாய் பேரிடர் துறை அதிகாரி கூறினார்.

 இது தவிர திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் அங்குள்ள மக்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி நீலகிரி, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் உள்ளது.

ஒவ்வொரு மீட்பு படையிலும் 22 வீரர்கள் உள்ளனர். இது தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் நீச்சல் தெரிந்த வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் அங்கு உஷார் நிலையில் அதிகாரிகள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 

Related Posts