இந்தியாவை இலங்கையோடு ஒப்பிடுவது அற்பமானது: அர்விந்த்பனகாரியா

இலங்கையின் பொருளாதார நிலையுடன் இந்தியாவை ஒப்பிடுவது அற்பத்தனமானது என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா விமர்சித்துள்ளார்.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்காக நரேந்திர மோடி அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்தியா, இலங்கையைப் போல் காட்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கடந்த 1991ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அடுத்தடுத்து அமைந்த அரசுகள் பொருளாதாரத்தை திறம்பட நிர்வகித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பொருத்தவரை நிதிப்பற்றாக்குறை நிலை கைமீறிப் போக அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்த அர்விந்த் பனகாரியா, இந்திய பொருளாதாரத்தை இலங்கை பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது அற்ப்பத்தனமானது என விமர்சித்தார்.
இந்தியா தனது நிதிபற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் கடன் வாங்குவது அரிதானது என குறிப்பிட்ட அவர், நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி புள்ளி விவரங்கள் சர்வதேச அளவில் ஒப்பிடும்போது நன்றாகவே இருப்பதாகக் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளுவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த முடிவுகள் சரியானதாக மாறி வருவதாகவும், இதனை விமர்சகர்களும் பாராட்டுவதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஜாஃபர் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவது போன்று எந்த பிரச்னையையும் இந்தியா சந்திக்கவில்லை என தெரிவித்த சையது ஜாஃபர் இஸ்லாம், இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதோடு வேகமான வளர்ச்சியையும் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். இதனை உலக நாடுகளும் ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசை விமர்சித்து வந்தவர்கள்கூட அரசின் பொருளாதாரக் கொள்கைகளை பாராட்டி வருவதாக சையது ஜாஃபர் இஸ்லாம் தெரிவித்தார்.