Home Archive by category

50 தலித் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேற்றம்- பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள டோங்ரி பகாதி கிராமத்தில் வசித்து வந்த 50 தலித் குடும்பங்களை கிராமத்தைவிட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை, வீடுகளை காலி செய்ய வைத்து, பொருட்களை வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள வனப்பகுதியில் போட்டதாவும், கிராம தலைவர் இஸ்சார் அன்சாரி தலைமையிலான கும்பல் தங்களை வெளியேற்றியதாகவும் தலித் சமூக தலைவர் ஜிதேந்திர முஷார் குற்றம்சாட்டினார்.

இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பலமு மாவட்ட காவல்துறை துணை கமிஷனர் தோடே கூறுகையில், இது நிலப்பிரச்சனை காரணமாக நடந்த சம்பவம் என்றும், வகுப்புவாதம் இல்லை என்றும் தெரிவித்தார். 'அந்த நிலம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை வழங்கி உள்ளனர். ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

எனினும் சட்டத்தை கையில் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள். தற்போது பழைய காவல் நிலைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன' என்றும் துணை கமிஷனர் தெரிவித்தார்.

 

Related Posts