பிரித்தானிய பிரதமர் தெரிவில் பரபரப்பை கிளப்பியுள்ள ஆய்வு முடிவு
பிரித்தானிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனக்கை விட வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் முன்னிலை பெறுவார் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததும், பிரித்தானிய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து ஜோன்சன், கடந்த 7ஆம் திகதி பதவி விலகினார்.
சூடுபிடிக்கும் பிரித்தானிய பிரதமர் தெரிவு
எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடர்வார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜோன்சன் இருந்த நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகளும் நடந்து வருகின்றன.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில், 3 பேர் வாபஸ் பெற்றனர். இதனால், போட்டி வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக இருந்தது. இதில், ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்கு பெறுவோர் வெளியேற்றப்பட்டு வந்தனர். இதனால், இறுதி போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் வேட்பாளர்களாக மீதமுள்ளனர்.
அக்கட்சியின், 1.60 லட்சம் தொண்டர்கள் வாக்களித்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் செப்டம்பர் 5ஆம் திகதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரு வேட்பாளர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். இதில், பொருளாதாரம், வரி உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் அதற்கான திட்டமிடுதல் பற்றியும் பேசப்பட்டது.
இவர்கள் இருவரில் ஒருவர் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை நடைபெறும் வாக்கு பதிவில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுபற்றி யூகவ் என்ற அமைப்பு சார்பில் நடந்த ஆய்வு ஒன்றில், சுனக்கை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரஸ் வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி, ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக 31 சதவீத உறுப்பினர்கள் வாக்கு செலுத்துவார்கள். டிரஸ்சுக்கு ஆதரவாக 49 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்திடுவார்கள்.
15 சதவீத உறுப்பினர்கள் எப்படி வாக்கு செலுத்துவார்கள் என தற்போது தெரியவில்லை. இந்தத் தேர்தலில், 6 சதவீத உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், பிரித்தானியாவில் அடுத்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனக்கை விட வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் முன்னிலை பெறுவார் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.