இந்தியாவுடன் போரை விரும்பவில்லை; பாகிஸ்தான்
இந்தியாவுடன் போரை தங்கள் நாடு விரும்பவில்லை என்றும் நிரந்தர அமைதியையே விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஹார்டுவர்டு பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு பேசினார்.
ஐ.நா தீர்மானப்படி காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதே தெற்காசிய பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்தும் என்று அப்போது அவர் கூறினார். பேச்சுவார்த்தைகள் மூலம், இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று கூறிய ஷெபாஸ் ஷெரீப், பிரச்சனையை தீர்க்க போரை ஒரு தேர்வாக இரு நாடுகளும் கருதக்கூடாது என்றார். இந்தியாவுடன் இன்னொரு போரை பாகிஸ்தான் விரும்பவில்லை என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் வர்த்தகம், பொருளாதாரம் போன்வற்றில் போட்டிபோட்டு முன்னேறி தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களையும், பயிற்சி பெற்ற ராணுவத்தையும் தற்காப்பிற்காகவே வைத்திருப்பதாகவும் தங்களின் ஆக்ரோஷத்தைக் காட்டுவதற்கு அல்ல என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறினார்.