Home Archive by category

போராடும் மல்யுத்த வீரர்கள், களம் இறங்கிய விவசாயிகள் - என்ன செய்ய போகிறது அரசு?

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரைக் கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் ஜந்தல் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா நடைபெற்றது. இதனையொட்டி போராட்டக்காரர்கள், நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மல்யுத்த வீரர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட வீரர்கள் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்ததாக புகைப்படம் பகிரப்பட்டது.

இதனையடுத்து, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உண்மையான புகைப்படத்தை வெளியிட்டு விளக்கமளித்திருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் சர்ச்சையானது.

இந்நிலையில், நேற்று தங்களது ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் எறியப்போவதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டம் அரசாங்கத்தை செவி சாய்க்க வைக்கவில்லை, ஆனால் பலாலி கிராமத்தில் எதிரொலித்திருக்கிறது.

ஹரியானா மாநிலத்திலுள்ள பலாலில் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான் இந்த போகத் சகோதரிகள். இந்தியாவுக்காக விளையாடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர்கள். அவர்களிட்ட பாதையில், பின்தொடர்ந்து வந்த பலாலி கிராமத்தை சேர்ந்த மற்ற வீரர் வீராங்கனைகள் தற்போது சற்றே தடுமாறி நின்றுள்ளனர்.

பிபிசி தளத்தின் அறிக்கையின்படி, வினேஷ், பபிதா போன்ற வீராங்கனைகளை போலவே சாதித்து தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என நினைத்த பல வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சம்பவத்திற்கு பிறகு, பின்வாங்கத் தொடங்கியுள்ளனர்.

மல்யுத்த வீரர்களுக்கு நடந்த இதே கதி தான் நாளை தங்களுக்கு நடக்கும் என பெற்றோர் அஞ்சுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பதக்கம் வெல்லும்போது கொண்டாடும் அரசாங்கம் தற்போது இப்படி நடத்துகிறது எனவும் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் சங்கீதா, வினேஷ் போகத்தின் தந்தையும், முன்னாள் மல்யுத்த வீரருமான மஹாவீர் போகத் இதுகுறித்து பேசுகையில், “நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்” என்றார்.

தற்போது இந்திய மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக, ஜூன் 4 ஆம் தேதி டிராக்டரில் விவசாயிகளுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்கு செல்லவிருக்கின்றனர் பலாலி கிராம மக்கள்.

ஞாயிற்றுக்கிழமை போராட்டம் வெடித்த பிறகு, தற்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தற்போது வரை மறுத்துவரும் பிரிஜ் பூஷன் மீது, இரண்டு எஃப் ஐ ஆர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

        

Related Posts