சீனா உடனான உறவு மிக மோசமாக இருக்கிறது: எஸ். ஜெய்சங்கர்

சீனா உடனான உறவு மிக மோசமான காலகட்டத்தில் உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டின் தலைநகர் பேங்க்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். அதன் ஒரு பகுதியாக, பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது, சீனா உடனான இந்தியாவின் உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எஸ். ஜெய்சங்கர், இந்தியா – சீனா உறவு மிக மோசமான கலகட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். கிழக்கு லடாக்கில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைதான் இதற்குக் காரணம் என அவர் கூறினார்.
இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்படாதவரை ஆசியாவுக்கான நூற்றாண்டு ஏற்படாது என தெரிவித்த எஸ். ஜெய்சங்கர், சீனாவும் இந்தியாவும் தங்களின் நலன்களுக்காக இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
இலங்கைக்கு இந்தியா மிகப் பெரிய அளவில் உதவிகளை அளித்துள்ளதாகத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இதுவரை அந்நாட்டிற்கு 3.8 பில்லியன் டாலர் அளவுக்கு உதவிகளை அளித்துள்ளதாகக் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு எத்தகைய உதவி தேவைப்பட்டாலும் அதனை இந்தியா அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அமெரிக்க எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடு இந்தியா மட்டுமே அல்ல என்றார்.
ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஜெய்சங்கர், இது தொடர்பாக வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறினார். ரோஹிங்கியாக்களை அவர்களது சொந்த நாடான மியான்மருக்கு திருப்பி அனுப்பும் விவகாரத்தில் இந்தியா வங்கதேசத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் என்றார். வங்கதேசத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர் என்பதும், இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.