உங்க வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால்...
பலரும் தான் இருக்கும் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக கிச்சன், வரவேற்பரை, பால்கனி மற்றும் படுக்கையறைகளை நேர்த்தியாக வைத்திருக்க விரும்புவோம். ஆனால், பலராலும் அது முடியாத ஒன்று. நாம் அழகுக்காக வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?... ஆம், அது உண்மை தான் என்கிறது ஜோதிடம். படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருட்கள் நமக்கு வாஸ்துப்படி பல தீமைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அப்படி படுக்கையறையில் வைக்க கூடாத பொருட்கள் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
செல்லப் பிராணிகள் : நம்மில் பெரும்பாலானோர், நாம் வளர்க்கும் செல்லப் பிராணியை படுக்கையில் தூங்க அனுமதிப்போம். ஏனென்றால், அதை நாம் பிராணிகளாக பார்ப்பதில்லை. வீட்டில் இருக்கும் ஒரு நபராக பார்க்கிறோம். ஆனால், வாஸ்துப்படி அது தவறு என கூறப்படுகிறது. செல்லப்பிராணிகளை நாம் படுக்கை அறைக்குள் விடுவது, நமக்கு நோய் தொற்றுக்களை உண்டாக்குவதுடன் எதிர்மறையான எண்ணங்களையும் ஏற்படுத்தும்.
எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் : எங்கும் இல்லாத அளவுக்கு படுக்கை அறையில் தான் டிவி, மொபைல் போன், லேப்டாப், வாட்ச் மற்றும் ஸ்பீக்கர் என பல எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை குவித்து வைத்திருப்போம். ஆனால், வாஸ்துப்படி மட்டும் அல்ல, அறிவியல் நீதியாகவும் அது நல்லதாக கருதப்படுவதில்லை. இது உங்கள் தூக்கத்தை பாதிப்பதுடன், பண இழப்புக்கு வழிவகுக்கும். இதனால், வாழ்க்கையில் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என்கிறது ஜோதிடம்.
கழுவாத பாத்திரங்கள் : நம்மில் பலர் பால், காஃபி, டீ குடித்துவிட்டு அந்த கப்பை கழுவாமல் அப்படியே நமது படுக்கைக்கு அருகில் வைத்திருப்போம். அப்படி செய்வது வாஸ்துப்படி தவறான விஷயமாக கருதப்படுகிறது. ஏனென்றால், அது வறுமைக்கு வழிவகுக்குமாம். நாம் தூங்கும் போது தீய கனவுகளுக்கு அவை வழிவகுக்கும் மற்றும் பொதுவாக வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.
செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள் : வாஸ்து சாஸ்திரத்தின் படி, செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் தொடர்பான எதையும் தலையணைக்கு கீழ் வைக்க வேண்டாம். இவற்றை தலைக்குக் கீழே வைப்பதால், வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே, படிக்கும் எந்த பொருட்களையும் உங்கள் படுக்கையில் வைக்க வேண்டாம்.
தங்கம் : நம்மில் பலருக்கும் அணிந்திருக்கும் மோதிரம், தோடு, வளையல் அல்லது சங்கிலிகளை இரவில் தூங்குவதற்கு முன் தலையணைக்கு கீழ் வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி வைப்பது வாஸ்துப்படி நல்லது அல்ல.ஏனென்றால், உறங்கும் போது தலைக்கு அடியில் எதையும் வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், அவை நமக்கு எதிர்மறையான எண்ணங்களை அதிகரிக்குமாம். இது உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்துவதுடன், உறவுகள் மீதான வெறுப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கண்ணாடி : தலைக்கு அருகில் அல்லது படுக்கைக்கு முன் கண்ணாடி இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். அதே போல, நீங்கள் படுக்கையில் தூங்கும் போது உங்களின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதபடி பார்த்துக்கொள்வது நல்லது. இது இரவில் பயங்கரமான கனவுகளுக்கு வழிவகுக்கும்.