Home Archive by category

அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் வசந்த கரன்னகொட - அதிருப்தியில் இலங்கை

இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும், சிறிலங்காவின் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னகொட தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேற்கொண்ட தீர்மானம் குறித்து கவலையடைவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கரிசனைகளை வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவுடன் நீண்ட கால இருதரப்பு உறவுகளை இலங்கை கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இணைத்து கொண்டதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் சிறிலங்கா எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில், இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது எனவும் அலி சப்ரி கரிசனை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.

என் மீது எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts