Home Archive by category

ரணிலுடன் இணையும் முக்கிய புள்ளி

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு முன்பாகவே முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக அக்கறை கொண்டுள்ளார் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் தெரிவு செய்தார்கள். பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அமைச்சு பதவிகள் இல்லாமல் உள்ளார்கள். 10 இற்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை முப்பதை காட்டிலும் அதிகரிக்க வேண்டுமானால் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கி அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க அதிக அக்கறை கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு முன்னதாகவே மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைவார் என்று  டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Posts