Home Archive by category

திமுத், குசல் அபார சதங்கள் குவிப்பு : பலம்வாய்ந்த நிலையில் இலங்கை

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் அணித் தலைவர் திமுத் கருணராட்ன, குசல மெண்டிஸ் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இலங்கை பலம்வாய்ந்த நிலையை அடைந்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

மொத்த எண்ணிக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது நிஷான் மதுஷ்கவின் விக்கெட்டை இலங்கை இழந்தது. தனது 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் தடவையாக ஆரம்ப வீரராக விளையாடிய நிஷான் மதுஷ்க நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் மிகவும் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 281 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 345 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன ஆகிய மூவரும் ஆட்டம் இழந்தது இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.

குசல் மெண்டிஸ் 193 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 140 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது ஆட்டம் இழந்தார். 56ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் குசல் மெண்டிஸ் குவித்த 8ஆவது சதம் இதுவாகும்.

அடுத்து வந்த முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.

மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடனும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடிய  திமுத் கருணாரட்ன 235 பந்துகளில் 15 பவுண்டறிகளுடன் 179 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தனது 85ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 34 வயதான திமுத் கருணாரட்ன குவித்த 15ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும்.

முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது தினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களுடனும் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக இராக்காப்பாளனாக ஆடுகளம் அனுப்பப்பட்ட ப்ரபாத் ஜயசூரிய 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 13 ஓட்டங்களில் 12 ஓட்டங்கள் ப்ரபாத் ஜயசூரியவினால் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடயார், கேர்ட்டிஸ் கெம்ஃபர், பென் வைட், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Related Posts