Home Archive by category

ஊடக ஆளுமையாக செய்திகளை கையாண்ட மாணிக்கவாசகம்; தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் இரங்கல்

தமிழ்த் தேசிய இனப்பற்றாளர் மறைந்த மூத்த ஊடகவியலாளர் “பொன்னையா மாணிக்கவாசகம்” அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைத் தீவின் மத்திய மலைநாட்டு பகுதியில் 1946 ஆம் ஆண்டு நான்காம் மாதம் முதலாம் நாள் (01.04.1946) அன்று தலவாக்கலையில் பிறந்து ஊடகப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு ஊடகப் போராளி.

இவர் ஈழநாடு, தி ஐலன்ட், ரொயிற்றர், பி.பி.சி, வீரகேசரி ஆகிய ஊடகங்களில் மூத்த ஊடகவியலாளராகவும் தலைசிறந்த சமூக சிந்தனைவாதியாகவும் இறுதி மூச்சுவரை தற்துணிவுள்ள பேனாமுனைப் போராளியாகவும் திகழ்ந்த, அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் தனது 77வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக 12.04.2023 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீது அளவு கடந்த அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் கொண்டவர். எமது மூத்த தளபதிகள், போராளிகள், தமிழீழ மக்கள் என அனைவரையும் நேசித்தார்.

அவருடைய கருத்துக்களிற்கும் எமது தலைமை மதிப்பளித்திருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் தகவல்களை திரட்டுவதிலும் அவற்றை செய்தியாக வெளியிடுவதிலும் அமரர் மாணிக்கவாசகத்திடம் அபார திறமையும், அனுபவமும் இருந்தது.

சமூக வேறுபாடுகள், கருத்துமோதல்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஊடக ஆளுமையாக அவர் செய்திகளை கையாண்ட விதமே அவரை உச்சத்தில் உயர்த்தியது.

என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் தமது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Related Posts