Home Archive by category

பெரும்பான்மையின அதிகாரிகள் வடக்கில் நியமனம்- முடங்கப்போகும் வட மாகாண சபை

வடமாகாண இறைவரித் திணைக்களத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையின உயர் அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் வட மாகாண சபையை முடக்கிப் போராடுவோம் என தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண சபையில் தகுதியுள்ள தமிழ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வடக்கில் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட வருகின்றனர்.

மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக இருக்கின்ற பந்துள என்பவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கி மாகாண இறைவரித் திணைக்களத்துக்கு வடக்கு ஆளுநரின் சம்மதத்துடன் நியமித்தார்கள்.

அவரின் பதவிக்காலம் மார்ச் 31 இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்ற நிலையில், மீண்டும் அவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு வடமாகாண பிரதம செயலாளரும் ஆளுநரும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வட மாகாணத்தில் தகுதியான அதிகாரிகள் பலர் இருக்கின்ற நிலையில் அனுராதபுரத்தில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அதுவும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதன் நோக்கம் என்ன?

யுத்த காலத்தில் அனைத்து துறைகளிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் சிறந்த நிர்வாகத்தையும் சிறந்த பொறுப்புகளையும் அடையக் கூடியதாக இருந்தது.

ஆனால் இன்று தமிழ் அதிகாரிகளை அரசியல் நோக்கத்துக்காக உயர் பதவிகளில் அமர்த்தாமல் மத்திய அரசு தமக்கு ஏற்ற வகையில் பெரும்பான்மையின் அதிகாரிகளை வடக்கில் நியமனம் செய்கிறது.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் வட மாகாண சுகாதார பணிப்பாளராக தற்போது கடமை ஆற்றும் திலீப் லியனகேயை விட சேவை மூப்பு கொண்ட தமிழ் அதிகாரிகள் வடக்கில் இருக்கின்ற நிலையில், அவரை நியமித்துள்ளார்கள்.

வடக்கு மாகாண அரச நிர்வாகங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்ந்தும் நியமிப்பதை ஆளுநர் தடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் வட மாகாண சபையை முடக்கிக் கட்சி பேதம் இன்றி போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Related Posts