Home Archive by category

மே.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

ஜமைக்காவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில்லியம்சன் 47 ஓட்டங்களையும் கோன்வே 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒடியன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் ஹோல்டர் மற்றும் ஒபெட் மெக்கோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புரூக்ஸ் 42 ஓட்டங்களையும் ரொமாறியோ செப்பர்ட் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தீ, லொக்கி பெர்குசன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் சான்ட்னர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Posts