Home Archive by category

பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு உறவுகள் கண்டனம்

கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எங்களின் போராட்டத்தின் உண்மையையும், நீதியையும் மறைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தன்  சர்வகட்சி கூட்டத்தில் ஒரு விடயம் கூறியிருக்கிறார்.

என்னவெனில் நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரையும் கொன்று விட்டீர்கள் அதற்கான பொறுப்புக்கூறலை நிச்சயமாக கூற வேண்டும் என்று கூறியிருக்கிறரர்.

இவ்வளவு காலமும் வாய் திறந்து பேசாத இந்த சம்மந்தன் சர்வகட்சி கூட்டத்தில்  இந்த பொறுப்புக்கூறலை ஏன் கூற வேண்டும் என்ற கேள்வியினை பாதிக்கப்பட்ட தாய்மார்களாக கேட்டு நிற்கின்றோம்.

கொடூர அழிப்பும், யுத்தமும் நடைபெற்ற காலப்பகுதியிலே இந்த அரசாங்கத்திற்கு துணை போனாரா?இல்லையேல் இன அழிப்பிற்கு ஐவரும் சம்மந்தப்பட்டவரா? என்ற கேள்விகள் எங்களிடம் இருக்கிறது.

உண்மையில் எங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சம்மந்தன் இவ்வளவு காலமும் தெரியப்படுத்தாமல் இருந்ததற்கு காரணம் என்ன? காட்டிற்கு போகிற நேரத்தில் வீட்டிற்கு போகாமல் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நீதியினை கோரும் போது எங்களுக்கு பின்னால் நின்று நாங்களும் இந்த போராட்டத்தில் பங்குபற்றுவதாக கூறி ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற நினைப்பது ஏன்?

எங்களுக்காக பேச வேண்டிய நீங்கள் இப்படியான வார்த்தைகளை கூறி  ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற முயலாதீர்கள். இது ஒரு போதும் நடக்காது.

இனி ஒட்டுமொத்த தமிழர்களும் விழிப்பாக இருப்பார்கள். பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரில் நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம். எங்கள் உண்மை நிலையினை கூறாமல் ஏழை தாய்மார்களை, கணவன்மாரை இழந்த பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தை வருகின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் தக்க வைப்பதற்கு இப்படியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.

போலியானவர்களின் வார்த்தைகளை நம்பி ஆவணங்களில் கையொப்பம் இட்டு உங்களுக்கான மரண சான்றிதழ்களையோ, ஆயிரம் ரூபாய் என போக்குவரத்திற்காக கொடுக்கிறார்களே அது தான் இழப்பீடு. அந்த ஆயிரம் ரூபாய் அங்கு ஒரு இலட்ச இழப்பீடாக பதியப்பட போகின்றது.

ஆகவே எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும் என எங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் சார்பாக உறவுகளை தேடுகின்ற அனைத்து தாய்மார்கள், தந்தைமார்கள் என அனைவருக்கும் கூறி நிற்கின்றோம்.- என்றனர்.

Related Posts