Home Archive by category

காணாமல்போனோர் விவகாரத்தைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கையாளும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இழுபடும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் நடுநிலைத் தரப்பாக நேரடியாக ஊடாடி விடயங்களைக் கையாள்வதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பெறுவதற்கு அரசின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கான பச்சைக் கொடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா காண்பித்துள்ளார்.

இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் பெரும் பூதாகாரமாகவே இருக்கும் நிலையில், அதனை சர்வதேச ஒத்துழைப்புடன் மட்டுமே ஒரு தீர்வை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இதேநேரம் இந்த விடயம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளிலும் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் பாரிய மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டாக இருப்பதோடு, தற்போது ரணில் அரசுடனான பேச்சுகளின் போது தமிழ்க் கட்சிகள் மிகவும் இறுக்கமான விடயமாக அதனை முன்கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இவற்றின் காரணமாக இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் போர்முனையில் செயற்பட்ட நடுநிலைத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையில் அதன் செயற்பாடுகளை மீளவும் விரிவுபடுத்த அனுமதி வழங்கி, அதன் மூலம் காணாமல்போனோர் பதிவை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது எனத் தெரிகின்றது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

Related Posts