Home Archive by category

'ஜாம்பி வைரஸ்': மனித குலத்துக்கு அடுத்த அச்சுறுத்தலா?

ரஷ்யாவின் உறைந்த ஏரியில் கண்டறியப்பட்டுள்ள ’ஜாம்பி வைரஸ்’, மனித குலத்துக்கான அடுத்த அச்சுத்தலா என்பதுதான் இந்த நிமிடத்தில் உலக மக்கள் மத்தியில் அதிகம் பீடித்த ஐயமாக நீடிக்கிறது.

கரோனா பெருந்தொற்று பரவலும் அதனுடன் 2 ஆண்டுகள் போராடிய அனுபவமும், மனிதர்கள் மத்தியில் புதிய தொற்றுகள் குறித்த அச்சத்தை அதிகம் விதைத்திருக்கின்றன. கரோனா தொற்று முதலில் அறியப்பட்ட்ட சீனா, தற்போது வரை அதனுடன் போராடி வருகிறது. அங்கு நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கையும், அரசு விதிக்கும் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமுமே இதற்கு சாட்சி. இவற்றுக்கு மத்தியில் தற்போதைய ஜாம்பி வைரஸ் குறித்த தகவலும் பீதியுடன் பகிரப்படுகிறது.

கிழக்கு ரஷ்யாவின் சைபீரிய உறைநிலப் பகுதிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் முகாமிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புவிவெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு ஆகியவற்றின் விளைவாக உருகும் பனிப்பாளங்கள் குறித்தும் இவர்களின் ஆய்வு தொடர்கிறது. அந்த வகையில் உறைமண் படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்த்திருக்கும் நுண்ணியிரிகள் குறித்தும் பல ஆச்சரியகரமான உண்மைகளை கண்டறிந்து வருகின்றனர். அவற்றில் ஒன்றாக தற்போதைய ஜாம்பி வைரஸும் உயிர் பெற்றிருக்கிறது.

ரஷ்ய, ஜெர்மன், பிரான்ஸ் ஆய்வாளர்களை உள்ளடக்கிய அந்த குழுவில் பிரான்ஸ் குழு சுமார் 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் இனம் ஒன்றை கண்டறிந்துள்ளது. உறைநிலையில் இருக்கும் ஏரியின் ஆழத்தில் கண்டறியப்பட்ட 13 வகை வைரஸ்களில் இந்த ’ஜாம்பி வைரஸ்’ ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. பூமியிலிருக்கும் தாவரங்கள் மற்றும் மனிதன் உள்ளிட்ட விலங்கினங்கள் மீது இந்த வைரஸின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், அதற்கு ஜாம்பி என நாமகரணமிட்டுள்ளனர்.

புவிவெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் காரணமாக துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பனிப்பாளங்கள் உருகத் தொடங்கியிருப்பதும், அதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் கடல்கோள் ஆளாவதும் அண்மை காலமாக அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை தொடர்பான கண்துடைப்பு மாநாடுகள் மற்றும் வறட்டு அறிக்கைகளுக்கு அப்பால் நடைமுறையில் மாற்றம் எதையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை. வளர்ந்த நாடுகளின் மறைமுக வன்முறையாக தொடரும் மனித அலட்சியத்தை செவிட்டில் அறைந்து உணர்த்தும் வகையில் ஜாம்பி வைரஸ் போன்றவை எழுந்தருளி வருகின்றன.

இதற்கு முன்னதாகவும் இதே குழுவினர் சைபீரிய பகுதிகளில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வைரஸ் ஒன்றை 2013-ல் கண்டறிந்து பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு ஜூனிலும் ஆர்க்டிக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அச்சுறுத்தலுக்கு உரிய ‘ஜாம்பி புழுக்கள்’ கண்டறியப்பட்டன. பனிப்பாளங்கள் உருகுதல் தொடர்கதையாவதால், அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் புதிய வைரஸ் மற்றும் பாக்டீரிய இனங்கள் தட்டுப்பட இருக்கின்றன. இவை ஆறுகள் வாயிலாக மிச்ச உலகத்தையும் எட்டும்போது அவற்றின் தொற்றும் வீதமும், உயிரிகள் மீதான அச்சுறுத்தலும் நிச்சயம் கவலைக்குரியன.

சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் கழித்து புத்துயிர் பெற்றிருக்கும் ஜாம்பி வைரஸும் புதிய தட்பவெப்ப சூழலுக்கு எவ்வாறு தாக்குபிடிக்கும், தனக்கான ஓம்புயிரை எவ்வாறு அடையாளம் கண்டு தொற்றும் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு ஆய்வாளர்களிடம் பதில் இல்லை. யானையின் மூதாதை இனமாக கருதப்படும் மம்மூத் என்ற விலங்கினத்தின் உடலில் இந்த வைரஸ் இருந்திருக்கலாம் என்கிறார்கள். இது உட்பட இன்னும் வரலாற்றுக்கு முந்தைய வைரஸ் இனங்கள் புதிதாக கண்டறியப்படும்போது அவற்றை தற்போதைய அறிவியல் ஆய்வு எதிர்கொள்ள முடியுமா என்ற புதிய கேள்வியும் எழுந்துள்ளது.

உயிரி ஆயுதம் தொடர்பான சீனாவின் ஆய்வக சோதனையிலிருந்தே கரோனா வைரஸ் வெளிப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதுபோல தற்போதைய சைபீரிய ஆய்வும் அச்சுறுத்தலுக்குரிய வைரஸ் இனங்களின் பரவலுக்கு வித்திடுமோ என்ற கவலையும் முன்வைக்கப்படுகிறது. மாயவாத சித்தரிப்புகளை மிஞ்சும் இந்த ஜாம்பி வைரஸ் குறித்தும் அதன் பராக்கிரமங்கள் பற்றியும் புதிய உண்மைகளுக்காக உலகம் கன்னத்தில் கைவைத்து காத்திருக்கிறது.

Related Posts