Home Archive by category

13 ஐ ஏன் எதிர்க்கிறோம்; தமிழ் புத்திஜீவிகளுக்கு விளக்கிய அனுர

அரசியலமைப்பில் 13வது திருத்தத்தின் ஊடாக, உரிய அதிகார பகிர்வு கிடைக்காது என்பதனால், அதற்கு தாம் எதிர்ப்பு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று தமிழ் புத்திஜீவிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போது, ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், மாகாண சபை முறைமை உள்ளிட்ட 13வது திருத்தத்தை தமிழ் மக்கள் போராட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்டமையினால், அதனை நிறைவேற்றுவதில் தமக்கு இணக்கம் எனவும் அவர் கூறினார்.

தமிழ் மக்கள் போராட்டத்தினால் இந்த உரிமையை பெற்றுக்கொண்டுள்ளமையினால், அது கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், அதனூடாக உரிய தீர்வு கிடைக்காது என்பதே தமது நிலைப்பாடு எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகார பகிர்வை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக் கொள்ளும் ஒரு சூழ்ச்சியையே, ரணில் விக்ரமசிங்க, அதிகார பகிர்வு விடயத்தின் ஊடாக முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். 

Related Posts