Home Archive by category

நான் இருக்கும் வரை விடமாட்டேன்; மைத்திரிக்கு சந்திரிகா பதிலடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ச குடும்பத்தினருக்கு அடமானம் வைக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து தான் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஊடக சந்திப்பை நடத்திய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தலைமைத்துவம் தொடர்பில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருக்கும் 95 வீதமானோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்கள் மக்களால் துரத்தியடிக்கப்படுவார்கள்.

இதனால் பொதுஜன பெரமுனவினருக்கு தற்போது ஒரு புதிய கட்சி தேவைப்படுகிறது. இதற்கு இலகுவான வழி மைத்திரிபால சிறிசேனவை பிடித்துக்கொள்வது.

லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ராஜபக்சர்களின் கட்சியாக சிறிலங்கா சுதந்திர கட்சியை மாற்றுவதற்கான முயற்சிகளை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கிறார். நான் இருக்கும் வரை அது நடைபெறாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்களின் கட்சி. இலங்கையில் இருக்கும் அரசியல் கட்சிகள் தற்போது சரிவர எதையும் செய்வதில்லை. என்னுடைய உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களும் மத்திய குழுவும் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான ஒரு விடயம் நடைபெற முன்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எழுத்து மூலம் இது குறித்து எனக்கு தெரிவித்திருக்க வேண்டும். எனினும் எனது உறுப்புரிமையை இடைநிறுத்துவது குறித்து இதுவரை எவரும் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. சமூக ஊடகங்கள் வழியாகவே நான் தெரிந்து கொண்டேன்.

நான் என்னுடைய கட்சிக்கு எந்தவொரு தீங்கும் இதுவரை செய்ததில்லை. சிறிலங்கா சுதந்திர கட்சி பின்னோக்கி பயணித்த 3 தடவை நான் கட்சியை கட்டியெழுப்பினேன்.

கட்சியின் மேலும் சில உறுப்பினர்களின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கட்சியில் நடைபெறும் விடயங்களுக்கு என்னை அழைக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக கட்சியில் இருந்து நான் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தேன். எனினும் கட்சியின் சில உறுப்பினர்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் இருப்பதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியை மைத்திரிபால சிறிசேன அழிப்பதை பார்த்து நான் கவலைப்படுகிறேன். கட்சியின் மூத்த உறுப்பினர்களை கட்சியிலிருந்து விலக்கி கட்சியின் நிலையை மேலும் மோசமடைய செய்கிறார்.

தற்போது கட்சிக்கு எஞ்சியிருப்பது பெயர் மாத்திரமே. சிறிலங்கா சுதந்திர கட்சியிடம் சிறந்த கொள்கைகள் இருந்தன. நாம் நாட்டை கட்டியெழுப்ப முயற்சித்த ஒரு கட்சியாக இருந்தோம்.

எனினும் தற்போது கட்சிக்கு ஒரு சரியான தலைவர் இல்லை. மக்கள் ஆதரவு இல்லை. கொள்கை இல்லை. சிறிலங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பவும் முன்னோக்கி கொண்டு செல்லவும் எனது உதவியை நாடும் தரப்பினருக்கு நான் உதவுவேன்” - என்றார்.

Related Posts