ஜகார்த்தாவுக்கு அருகில் நிலநடுக்கம்; 20 பேர் வரையில் பலி

இந்தோனேஷியாவில் இன்றைய தினம் 5.6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது பல கட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக மிகப்பெரும் சேதங்களும் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 300இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜகார்த்தாவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சியான்ஜூர் நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 18ஆம் திகதி இந்து சமுத்திரத்தின் சுமத்ரா தெற்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட போது அதன் பின்னர் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.