Home Archive by category

ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்கள் 90 பேர்..! மீட்டுத்தருமாறு கண்ணீர்வடிக்கும் தாய்

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணா சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசாவே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.

இலங்கையில் இருந்து தனது மகளை டுபாயில் வீட்டு பணிக்காக அழைத்துச் செல்வதாக முகவரம் பொய்க்கூறி, ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ள தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகம், 16 தரம் வேலைவாய்ப்பு பணியகம், மனித உரிமை ஆணைக்குழு, சிறுவர் நன்னடத்தை பிரிவு என கடந்த 9 மாதங்களாக தனது மகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தனது மகள், அவருடன் அங்கு 90பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக காணொளியொன்றினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை அந்த பகுதியைச் 9, 10 வயது இருபெண் குழந்தைளின் தாயாரான பர்திமா ஸபீரா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதால், அவரையும் மீட்டு தருமாறு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த குறைந்தது 90 பெண் பணியாளர்கள் ஓமானில் நிர்க்கதியாகியுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஓமானின் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு செல்லும், இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களிடமிருந்து நாளாந்தம் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் பெரும்பாலோர் வருகை அல்லது சுற்றுலா வீசாவைப் பணி வீசாக்களாக மாற்றும் நோக்கத்தில் ஓமானுக்கு சென்றுள்ளவர்களாவர்.

அவர்களில் பலர் பதிவு செய்யப்படாத முகவர்களால் மனிதக்கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு துன்புறுத்தல்கள் உட்பட பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது, ​​சுமார் 90 இலங்கைப் பெண் வீட்டுப் பணியாளர்கள் ஓமானில் இருந்து நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு திரும்புவதற்கான வீசா,விமான அனுமதிச்சீட்டு, முகவர் கட்டணம், மற்றும் அந்தந்த அனுசரணையாளர்கள் கோரும் ஆட்சேர்ப்பு செலவு போன்ற செலவுகளை அவர்களால் தாங்க முடியவில்லை என்று மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதற்கான செலவுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுள்ளது.

இந்த பெண் தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட நலன்புரி வசதிகளை தூதரகம் வழங்குகிறது.

இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்கு ஓமான் அதிகாரிகளுடன் தொடர்ந்து செயலாற்றி வருகிறது இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டில், 240 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை நாடு திரும்புவதற்கு தாம் உதவியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Posts