மீண்டும் சிக்கலில் சிக்கிய அமெரிக்க மருத்துவர்
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க பல் மருத்துவர் ஒருவர் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கைதாகியுள்ளார்.
சார்ள்ஸ் ஸ்டாமிடோலெஸ் (Dr. Charles Stamitoles) எனும் இப்பல்மருத்துவர் புளோரிடா மாநிலத்தில் சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார்.
கடந்த வருடத்டதில் மாத்திரம் 22 தடவைகள் அவர் மீது ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன நிலையில் கடந்த வாரம் அவர் மீண்டும் கைதாகியுள்ளார்.
64 வயதான இம்மருத்துவர் (Dr. Charles Stamitoles) மீது அடிக்கடி துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்ததால், அவர் ஆண்களுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கலாம் என கடந்த ஜூன் மாதம் புளோரிடா மருத்துவ அதிகாரிகள் சபை உத்தரவிட்டிருந்தது.
எனினும் தொடர்ந்தும் பெண்களுக்கு சிகிச்சை அளித்த அவர் 2 மாதங்களில் 34 தடவைகள் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். இவர் புளோரிடா மாநிலத்திலும் ஜோர்ஜியா மாநிலத்திலும் 1984 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர்.
ஜோர்ஜியா மாநிலத்தில் 1984 முதல் 1987 ஆம் ஆண்டு வரையான காலத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்கு 30 நாட்கள் இடைநிறுத்தம், 2 வருட நன்னடத்தை கண்காணிப்பு, 2,000 டொலர் அபராதம் ஆகியன விதிக்கப்பட்டுள்ளன.
1995 ஆம் ஆண்டு காப்புறுதி குற்றச்சாட்டுகள் தொடர்பில் சார்ள்ஸ் ஸ்டாமிடோலெஸின் (Dr. Charles Stamitoles) பல்மருத்துவ அனுமதிப்பத்திரம் ஜோர்ஜியா மாநில அதிகாரிகளால் ரத்துச்செய்யப்பட்டிருந்து.
புளோரிடா மாநிலத்திலும் பல்வேறு தடவைகள் குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர் ஸ்டாமிடோலெஸ் (Dr. Charles Stamitoles) , அண்மையில் கைதாகி 25,000 டொலர் பிணையில் விடுவிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சைக்கு வந்த மற்றொரு பெண்ணை துஷ்பிர யோகப்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் அவர் (Dr. Charles Stamitoles) மீண்டும் கைதாகியுள்ளார்.