Home Archive by category

16 ஆண்டுகள் சிறை வாழ்வின் பின் 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று அரசியல் கைதிகளை கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அதனடிப்படையில் அவர்களைச் நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

அவர்களுக்கு எதிரான சாட்சியமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அவர்களது ஒப்புதல் வாக்குமூலங்கள் அவர்களால் சுயாதீனமாக வழங்கப்பட்டவை அல்ல என்று தீர்மானித்த நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அவர்களை நேற்று விடுதலை செய்தது.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் கைது செய்யப்பட்ட தங்கவேல் சிவகுமார் (வயது 47), எட்வர்ட் சாம் சிவலிங்கம் (வயது 49), சீலன் ஆனந்தராஜா (வயது 45) ஆகியோரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

காலிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் 2006 இல் கைது செய்யப்பட்டனர். அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 16 வருடங்களின் பின்னர் அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயாதீனமாக வழங்கப்படவில்லை என நீதிமன்றம் தீர்மானித்து மூவரையும் விடுவித்துள்ளது.

Related Posts