Home Archive by category

பிரான்ஸின் ரியூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையர்கள்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி படகில், 17 பேர், இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ரியூனியன் தீவை சென்றடைந்துள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவின் வடக்கு கடற்பகுதியில் இவர்கள் பயணம் மேற்கொண்ட படகு தீவின் கடற்றொழிலாளர்களால் கண்டறியப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 17 பேருடன் அந்த படகு நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு தீவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த படகுடன் இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் ரீயூனியனுக்கு மூன்று படகுகள் சென்றுள்ளன.

கடந்த செப்டெம்பர் 17 அன்று, இரண்டு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உட்பட 46 பேர் ஒரு மீன்பிடி படகில் தீவுக்கு வந்துள்ளனர். அவர்களில் 39 பேர் காத்திருப்புக்காக நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மற்ற ஏழு பேர் விமானம் மூலம் இலங்கைக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜூலை 31 அன்று, ஆறு ஆண்கள் தீவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பிரெஞ்சு பிரதேசத்தில் தங்குவதற்கும் புகலிட விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கும் உரிமை பெற்றுள்ளனர்.

2018, மார்ச் மற்றும் ஏப்ரல் 2019 க்கு இடையில், இலங்கையிலிருந்து ஆறு படகுகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட 273 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளனர். இதில் சிலர் ரீயூனியனில் தங்கியுள்ளனர். ஏனையோர் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Related Posts