Home Archive by category

ஸ்கொட்லாந்து பெண்ணின் தற்போதைய நிலை

இலங்கையின் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்று போராட்டங்களை நேரலை செய்தமைக்காக, விசாரணை செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள, பிரித்தானிய- ஸ்கொட்லாந்தின் பெண், பிரித்தானியாவின் இணையம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

அதில் தாம் வெளிவராத இடம் ஒன்றில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெய்லி ரெக்கோட் என்ற இணையத்துக்கு செவ்வியளித்துள்ள அவர், தம்மிடம் கடவுச்சீட்டு இல்லை என்றும், பணம் மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் யாரையும் நம்பவில்லை என்றும் சோர்வடைந்து, குற்றவாளியை போன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே அவர்கள் காட்டியுள்ள செயல்களால், அவர்களின் காவலில் இருப்பதற்கு தாம் பயப்படுவதாகவும் அன்ட்ரூஸ் பெண் கெய்லி பிரேசர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எப்படி நாட்டை விட்டு வெளியேற முடியும் என்பது தொடர்பில் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பறிவோர்,தாம் இருக்கும் இடத்தைக் கண்காணிக்க பயன்படுத்தலாம் என்ற சந்தேகத்தில் தனது தொலைபேசியிலிருந்து சிம் அட்டையை அகற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்  நிலையில் இந்த மாத இறுதியில் தமக்கான வழக்கு இடம்பெறும்போது தம்முடைய ஆவணங்கள் கையளிக்கப்படும் என்றும் தாம் நாடு திரும்ப முடியும் என்றும் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவரை நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி அவருடைய மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே அவர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts