Home Archive by category

மலாலா பாக்கிஸ்தான் விஜயம்

தலிபானின் கொலை முயற்சியிலிருந்து தப்பி பத்து வருடங்களாகின்ற நிலையில் மலாலா யூசுவ்சாய் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாக்கிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

தனது 15 வயதில் மலாலா ஆப்கானின் தலிபானின் கொள்கைகளை பின்பற்று பாக்கிஸ்தான் தலிபான் குழுவொன்றின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கானார்.

தலையில் காயமடைந்த மலாலா பிரிட்டனிற்கு உயிர்காக்கும் மருத்துவசிகிச்சைகளிற்காக அழைத்து செல்லப்பட்டார்.

உயிர் தப்பிய மலாலா பின்னர் பெண்களிற்கான கல்வி உரிமைக்காக குரல்கொடுப்பதை தீவிரப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்ததுடன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.

இந்நிலையில் தான் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில் அவர் மீண்டும் பாக்கிஸ்தானிற்கு சென்றுள்ளார்- கராச்சி.

துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் அவர் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

பாக்கிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதே அவரின் நோக்கமாகும்.

பாக்கிஸ்தானில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை தொடர்ந்தும் ஈர்ப்பதும் முக்கிய மனிதாபிமான உதவி குறித்து கவனத்தை ஈர்ப்பதும் அவரின் விஜயத்தின் நோக்கம் என மலாலா நிதியம் என்ற அவரது அமைப்பு தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானில் கடும் மழை வெள்ளம் காரணமாக 8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் ஆபத்தான சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

மலாலாவின் முன்னாள் பாடசாலை மாணவிகள் தங்கள் பகுதியில் வன்முறைகள் அதிகரிப்பது குறித்து( ஸ்வாட் பள்ளத்தாக்கு மிங்கோரா) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தருணத்தில் மலாலாவின் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

திங்கட்கிழமை பாடசாலை பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சாரதி கொல்லப்பட்டதுடன் மாணவியொருவர் காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து 2000 மாணவிகளும் பெற்றோரும் பாடசாலைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான், தலிபான் அமைப்பே இந்த தாக்குதலிற்கு காரணம் என உள்ளுர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்கள் பகுதியில் அமைதி வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இன்றும் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர்.

Related Posts