Home Archive by category

எரித்த சாம்பல் மேட்டிலிருந்து மீண்டெழுவோம்; களுத்துறையில் புதிய பயணத்தை ஆரம்பித்த ராஜபக்சக்கள் சூளுரை

மே 9 போராட்டங்களின் போது முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவின் எரிக்கப்பட்ட அலுவலகத்தில் ராஜபக்சக்களின் மீள் எழுச்சிக்கான பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு மூன்றாவது தடவையாகவும் மஹிந்தவை ஜனாதிபதியாக்கி ஆட்சியமைப்போம் என்று கோஷம் எழுப்பினர்.

நெருப்பிலே போட்டாலும் மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள்.

மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டுக் கட்சி ஆட்சி தொடரும். தேவையான நேரங்களில் உரிய அஸ்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.

அத்துடன், மொட்டுக் கட்சி ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாவதற்கு விமல், கம்மன்பில, டலஸ் போன்ற உள்ளகச் சதிகாரர்களும் பிரதான பங்கை வகித்தனர் என விமர்சனக்கணைகள் தொடுக்கப்பட்டதுடன், இரசாயன உரப் பாவனைக்கு தடை விதிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவும் பின்னடைவுக்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் சந்திப்பு, ஒன்றாக எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ் களுத்துறையில் உள்ள ரோஹித்த அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மக்களின் தாக்குதல்கள் வீடெரிப்பு சம்பவத்துக்குப் பிறகு  மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் பொதுவெளியில் ஒரே மேடையில் சங்கமித்தது இதுவே முதன்முறையாகும். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ச, பவித்ராதேவி வன்னியாராச்சி, சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்ட  மொட்டுக் கட்சி எம்.பிக்கள் நிகழ்வில் உரையாற்றினர். 

இதில் குறிப்பாக ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம் ஆகியோர், விமல், கம்மன்பில உள்ளிட்டோரைக் கடுமையாக சாடினர்.

சூழ்ச்சிக்காரர்கள் எனவும் முத்திரை குத்தினர்.டலஸ் மீது சொற்களால் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் போராட்டக்காரர்கள் மீது சொற்கணைகளைத் தொடுத்தனர்.அதேபோல் இரசாயன உரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்திருந்த முடிவை பவித்ராதேவி சாடினார்.இனி யார் ஜனாதிபதியானாலும், தம்மையும், கட்சியையும் வழிநடத்த மஹிந்த ராஜபக்ச அவசியம் எனவும் பவித்ரா கேட்டுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறை ஜனாதிபதி ஆகியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், சுயவிமர்சனத்துடன், தவறுகளைத் திருத்திக்கொண்டு பீனிக்ஸ் பறவைபோல் மொட்டுக் கட்சியும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள் என எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சூளுரைத்தனர்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் காலை வாரவில்லை எனவும், மஹிந்த பதவி விலகியதால்தான் கோட்டாவும் வீடு செல்ல நேரிட்டது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts