Home Archive by category

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - அமெரிக்கா, தென்கொரியா கண்டனம்

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வரையில் 3 முறை மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. 

குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. 

வடகொரியா இப்படி தனது அடாவடி போக்கை தொடர்ந்தால் அந்த நாடு மிகவும் பயங்கரமான பதிலடியை எதிர்கொள்ளும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் எச்சரித்துள்ளார். இதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் சட்ட விரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு முற்பட்டால் அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான பதிலடியை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Related Posts