Home Archive by category

கனேடிய நீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு

பெற்றோர் உளவாளிகள் என தெரியவந்ததால் குடியுரிமையை இழந்த நபருக்கு கனேடிய உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

கனடாவில் பிறந்ததால் கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவருடைய பெற்றோர் ரஷ்ய உளவாளிகள் என பின்னர் தெரியவந்ததால் அவர் கனேடிய குடியுரிமையை இழந்த நிலையில், அவருக்கு ஆதரவாக கனேடிய உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

ரொரன்றோவில் பிறந்த அலெக்சாண்டரின் (Alexander Vavilov) பெற்றோர் போலியான பெயரில் வாழ்ந்துவந்த ரஷ்ய உளவாளிகள் என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு அலெக்சாண்டரின் பெற்றோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்த விடயம் தெரியவந்ததும், கனேடிய குடியுரிமை பதிவாளர் அலெக்சாண்டரின் குடியுரிமைச் சான்றிதழை ரத்து செய்துவிட்டார்.

கனடாவில் பிறந்தவர்களுக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படும் நிலையில், குடியுரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு நாட்டின் தூதரக அலுவலர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படாது என்ற விதிவிலக்கு உள்ளது. அதன்படி அலெக்சாண்டரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

 

அதை எதிர்த்து கனேடிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, கனேடிய நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை அளித்தது.

அலெக்சாண்டருக்கு தான் ஒரு கனேடிய குடிமகன் என்பது மட்டுமே தெரியுமேயொழிய, அவரது பெற்றோர் ரஷ்ய உளவாளிகள் என்பது தெரியாது என்பது முதலான சில முக்கிய காரணங்களால், அவருக்கு மீண்டும் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், எளிமையாகக் கூறினால், புலம்பெயர்தல், குடியுரிமை, பாஸ்போர்ட் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து இனி நீதிமன்றம் செல்லலாம் என்பதை கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது.

அத்துடன், இனி கனேடிய குடியுரிமை பதிவாளர் போன்ற அதிகாரிகள் புலம்பெயர்ந்தவர் ஒருவரது குடியுரிமை விடயத்தில் முடிவெடுக்கும்போது, பல்வேறு காரண காரியங்களை அலசி ஆராய்ந்து, பல படிநிலைகளைப் பின்பற்றித்தான் முடிவெடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதிமுறைக்கும் நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.  

Related Posts