Home Archive by category

"சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வையே ஏற்றுக்கொள்வோம்"

அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் காலையில் இருந்து மாலை வரை வவுனியா அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் எமது மக்களை பாதிக்கும் பல விடயங்கள் தீர்க்கமாக கலந்து ஆலோசிக்கப்பட்டன. விசேடமாக நிலங்கள் அபகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகாவலி, தொல்லியல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு என்று வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையிலும், வேறு விதமாகவும் நிலங்களுக்கு ஏற்பட இருக்கின்ற ஆபத்துக்களை ஆராய்ந்தோம்.

திருக்கோணச்சரத்திற்கு சொந்தமான மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பாக கட்சியினால் சில குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்களை உடனடியாக ஆராய்ந்து அடுத்த மத்திய செயற்குழு கூட்டங்களுக்கு முன்னதாக அனைவருக்கும் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களது வாழ்விடங்களுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்புக்கள் குறித்து திருகோணமலையில் இருந்து கட்சி மாவட்ட மட்ட உறுப்பினர்கள் தமது கருத்துக்கள் கூட்ட ஆரம்பத்தில் பகிர்ந்து சென்று இருக்கிறார்கள்.

இது தொடர்பில் கட்சி தலைவர், சிரேஸ்ட உபதலைவர், கட்சி செயலாளர் ஆகியோருடன் நானும் சென்று எங்களுடைய பெரும் தலைவர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இரா.சம்பந்தனை சந்தித்து இவற்றை கையாள்வது குறித்த உபாயங்கள் தொடர்பாகவும் பேசுவதாக முடிவு எடுத்துள்ளோம்.

கட்சி மாநாட்டுக்கு முன்பாக எமது கட்சி கிளைகள் புனரமைத்தலில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்தோம்.

கோவிட் தொற்று, எரிபொருள் பிரச்சனை காரணமாக நலிவடைந்து இருந்த இந்த செயற்பாடுகள் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

அக்டோபர் மாத இறுதிக்கு முன்னதாக அனைத்து மாவட்ட கிளைகளையும் புனரமைத்து அதனைத் தொடர்ந்து கட்சி மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில மாதங்கள் தடைப்பட்டிருந்தன. அது மீளவும் முடக்கி விடப்பட்டுள்ளது. ஒரு ஊர்தியுடன் சென்று பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நடமாடும் செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளோம். இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் இது கொண்டு செல்லப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியினர் முன்னின்று செய்கிறார்கள். வடக்கிற்கான செயற்பாடு நிறைவடைந்துள்ளது. அடுத்து அனுராதபுரம் நோக்கி நகரவுள்ளோம். தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக ஹம்பாந்தோட்டை செல்லவுள்ளோம். இதற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

இதற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற கட்சிகள், 2000 தொழிற்சங்களை கொண்ட ஒன்றியமும், மக்கள் அமைப்புக்களும் என பலர் ஆதரவு வழங்கியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Posts