Home Archive by category

இந்தியாவிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் கொடுத்த பதிலடி

இந்திய இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது அதில் இருந்த குறைபாடுகளை தமிழ் தலைவர்கள் ராஜீவ் காந்தியிடம் வலியுறுத்திய பின்னர் அதற்கு விரைவில் தீர்வினை பெற்று தருவதாக இந்தியா உறுதியளித்ததின் பேரில் ஆயுத போராட்ட இயக்கங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதத்தை இந்திய அமைதி காக்கும் படையிடம் ஒப்படைத்ததாக வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்டதே 13வது திருத்தம் என்றும் அது அரசியல் அமைப்பு சட்டதில் இருப்பதாகவும் இன்று நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை 21 திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது தான் இலங்கை அரசியல் அமைப்பின் சட்டம் அதன்பிரகாரமே அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டினர்.

இந்திய இலங்கை ஒப்பந்ததில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதாக உறுதியளித்தை தொடர்ந்து தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர்களுக்கும் இந்திய தரப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தை பலாலி தளத்தில் இடம் பெற்றது.

23ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேச்சு வார்த்தை 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் 26ம் திகதி தியாகி திலீபனின் மரணத்தை தொடர்ந்து 28ம் திகதியன்று பேச்சுவார்த்தை இடம் பெற்றது எனவும் தெரிவித்தார்.

குறித்த ஒப்பந்த கைச்சாத்தின் போது இந்திய தூதர் கையெழுத்திடாமல் தன்னுடைய துணைத்தூதுவர் கையெழுத்திடுவார் என்று சொன்ன போது விடுதலை புலிகளின் தலைவர் தனக்கு பதிலாக துணைத்தலைவர் மாத்தையா கையெழுத்திடுவார் என்று கையெழுத்திட்ட விடயம் தான் ஒக்டோபர் மாதம் 1ம் திகதியில் இருந்து ஒரு இடைக்கால நிர்வாகம் இயங்குவது என்ற தீர்மானம் எடுக்க காரணம் என சுட்டிக்காட்டினார்.

12 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகமும் அதில் 7 பேரை தழிழீழ விடுதலை புலிகள் நியமிக்கலாம் என்று வழங்கப்பட்டு பெயர்களை விடுதலை புலிகள் சமர்பித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி இடைக்கால நிர்வாகியாக 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதில் மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த பத்மநாதன், அமரர் சிவானந்தசுந்தரம் மற்றும் சி.வி.கே சிவஞானசுந்தரம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதன் பிற்பாடு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி இடைக்கால நிர்வாகம் இயங்க ஆரம்பித்த வேளை அன்றைய அதிபர் அமரர். ஜெ.ஆர். ஜெயவர்த்தனா, சி.வி.கே சிவஞானசுந்தரம் அவர்களின் பெயரை தெரிவு செய்தமையால், எதற்காக முதலாவது பெயர் தெரிவு செய்யப்படவில்லை என விடுதலை புலிகள் சம்மதம் தெரிவிக்க மறுத்தார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஒக்டோபர் மாதம் 3ம் திகதி இந்தியாவுக்கு பயணமான குமரப்பா புலேந்திரன் உட்பட 17 பேர் சென்ற கடல் புறா படகு கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட நிலையில் அவர்கள் சயினைட் உட்கொண்டு 12 பேர் வீரமரணம் அடைந்தார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன் பிறகே உள்நாட்டு போர் பாரிய அளவில் ஆரம்பமாகியது எனவும் தெரிவித்தார்.

13ம் திருத்தச் சட்டத்தை பொறுத்த வரை அதில் குறைபாடு இருப்பதும் காணி மற்றும் காவல்துறை அதிகாரம் இல்லாமல் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே என்றும் இத்தனை அதிபர்கள் வந்த பிறகும் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆக ஒருவரும் இதை இறுதி தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இந்தியா நிர்ப்பந்தித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என குறிப்பிட்டார்.

Related Posts