Home Archive by category

'வெளியக பொறிமுறையானது இலங்கைக்கும் அரசியலமைப்புக்கும் முரணான விடயமாகும்'

இலங்கையின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்படும் வெளியக பொறிமுறையானது, இலங்கைக்கும்  அரசியலமைப்புக்கும் முரணான விடயமாகும் என தெரிவித்த அரசாங்கத்தின் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண,  தேசிய பொறிமுறை ஊடாக  இலங்கையின் அரசியலமைப்புக்கு பொருத்தமான ஏற்ற பொறிமுறை ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் நிலைப்பாட்டில் தான் அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கின்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அபிப்ராயமே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியால் ஜெனீவாவிவ் முன்வைக்கப்பட்டது என்றார்.

இதேவேளை, மனித உரிமைகள் மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றமை வழக்கமான செயற்பாடுகளாக உள்ளன என தெரிவித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஆனால்  அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் அலி சப்ரி சர்வதேசத்தின் முன்பாக அறிவித்துள்ளார் என்றார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட கருத்து அது அமைச்சர் அலி சப்ரியின் தனிப்பட்ட கருத்தல்ல. அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதி, அமைச்சரவையின் நிலைப்பாடே அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பிரிவினைவாத, அடிப்படைவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாடுகளில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள், தவறான அர்த்தம் மற்றும் கண்ணோட்டத்தில் இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் சர்வதேசத்திடம் எடுத்துச் செல்லப்பட்டதன் ஊடாக எமது நாட்டின் மீது  பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும் படிப்படியாக அதனை எம்மால் சரிப்படுத்த முடிந்துள்ளது என்றார்.

Related Posts