Home Archive by category

'குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணியாக கூட கோட்டாபய அமெரிக்க வர முடியாது'-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணமாக கூட வருகை தர அனுமதி வழங்கப்படமாட்டாது என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முன்னாள் அரசியல் நிபுணர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தனது குடியுரிமையை ரத்து செய்து கொண்டார்.

தற்போது குடியுரிமை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கின்றார். அமெரிக்காவில் குடியுரிமை வழங்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் சில விடயங்களை தேடி பார்க்கும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற முற்படும் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவிற்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அவரை அறிவுறுத்தும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துதரகம் ஊடகங்களுக்கு அறிவித்தது.

காரணம் ஒருவரின் விசா ரத்து செய்யப்படல் பொதுவாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.

ரணில் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஆதரவு
மேலும் ராஜபக்ச ஆட்சியா அல்லது ரணில் விக்ரமசிங்க ஆட்சியா என்பது அமெரிக்காவிற்கு தேவையில்லை. அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சில வரையறைகள் காணப்படுகின்றன. அதற்கமைவாக செயற்படுவர்களுடன் அமெரிக்கா இணைந்து செயற்படும்.

அவ்வாறு பார்க்கும் போது ராஜபக்ச ஆட்சியை பார்க்கிலும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியையே அமெரிக்கா விரும்புகின்றது" என தெரிவித்துள்ளார்.    

தயா கமகே என்பவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் வெளிவிவகார கொள்கை தொடர்பான அதிகாரியாக கடமையாற்றியவர் ஆவார்.

 1970 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளிவிவகாரம் தொடர்பான அரசியல் ஆய்வாளராகவும் ஊடக ஆலோசகராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பிரதேசத்தில் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts