Home Archive by category

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை பார்வையிட்ட உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவுகளை நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

தேசிய சிறைக் கைதிகளின் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகள் நிர்வாகத்தினாலும், குரல் அற்றோர் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் அரசியல் கைதியாக 17 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் தனது தந்தையை சந்தித்த மகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது தந்தையை விடுதலை செய்யுங்கள் 

“இன்றைய நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு எங்கள் உறவுகளை சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் தீர்ப்பு கிடைக்க வேண்டிய எனது தந்தைக்கு ஐந்து தவணைகள் பிற்தள்ளப்பட்டு இன்றளவும் தீர்ப்பு கிடைக்கவில்லை.

நீதிமன்றில் வழக்கு விசாரணை இருக்கும் நாட்களில் நீதிபதி அல்லது சட்டதரணிகள் சமூகமளிக்காது போவார்கள் இவ்வாறான செயற்பாடுகளினால் அவர்களின் விடுதலை தொடர்பில் ஒரு முடிவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

”அரசியல் கைதியாக சிறையில் வாழும் எங்கள் உறவுகளை தொட்டு தடவி பேசுவதற்காக கிடைத்த இந்த சந்தர்ப்பம் விரைவில் எங்களது வீட்டில் அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்கு நாங்கள் ஏங்கி நிற்கின்றோம்.

மனிதநேய அடிப்படையில் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும். எங்களது வேதனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அனைத்து தரப்பினரும் மனித நேயத்துடன் செயற்படுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்”என அரசியல் கைதிகளின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.   

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களுடைய உறவினர்கள் 40 பேர் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்தனர்.

‘உறவுகளுக்கு கரம் கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்’ எனும் தொனிப்பொருளில் கடந்த 13 முதல் 27 ஆண்டுக்களாக சிறைகளில் வாடும் உறவுகளை சந்திப்பதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இவர்கள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை கொழும்பை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் மற்றும் தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தமது உறவினர்களை பார்வையிட்டனர். 
 

Related Posts