Home Archive by category

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது சர்வதேச சமூகத்தின் கடமை- அன்டோனியோ குட்டரெஸ்

பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த ஜூன்மாதம் முதல் இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய வெள்ள மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் சென்று ஆய்வு செய்த குட்டரெஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் அரசை பாராட்டு தெரிவித்தார். 

பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்டவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். பருவநிலை மாற்றத்தை தடுக்க பாகிஸ்தான் போன்ற நாடுகள் குறைந்த பங்களிப்பதையே வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த நாடுகள் அதன் விளைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

இயற்கை பேரழிவு தவறான இலக்கை தாக்கியுள்ளது, பருவநிலை மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள்தான் இந்த வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் காற்று மாசு அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும்,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆதரவை வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

 

Related Posts