Home Archive by category

'ஐஎம்எப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை'

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்டத்திலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவில்லை இருப்பினும் அவர்கள் கலந்துரையாடல்கள் மூலம் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

அத்துடன் குறித்த உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் பகிரங்கமாக அறிவிக்கப்படும். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்.

மேலும் குறித்த உடன்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் இணைந்து செயற்படும். அவ்வாறு கைச்சாத்திடப்படும் ஒப்பந்தமே பகிரங்கப்படுத்தப்படும்.

இந்தநிலையில் குறித்த கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டார்.

அதற்கமைவாக உடன்பாடு, ஒப்பந்தம் போன்ற வாரத்தைகளை பறிமாற்றிக்கொண்டிருக்க வேண்டாம் எனவும், ஒன்றாக ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும் என்று கூறுவீர்களாயின் நாங்கள் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,அத்துடன் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நோக்கி “நீங்கள் ஒரு பட்டதாரி, ஆனால் யாரோ எழுதி தந்த படிவத்தை நாடாளுமன்றத்தில் வாசிக்கின்றீர்கள்” என விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த “யாரும் எழுதி தருவதை நான் படிக்கவில்லை, ஐஎம்எப் ஒப்பந்தங்களின் வரைபுகள் குறித்து உரிய சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

ஐஎம்எப் உடனான ஊழியர் மட்டத்திலான ஒப்பந்தம் வெற்றியளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் குறித்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts