Home Archive by category

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருந்து அச்சுறுத்தல்; ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறும் தருவாயில் கூட இங்கை அரசின் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் எல்லையில்லாமல் தொடருகின்றன என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருந்து தொலைபேசி அழைப்பினூடாக அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று, பிற்பகல் 02.40 மணியளவில் பயங்கரவாதத் தடுப்ப்பு பிரிவில் இருந்து கதைப்பதாக ஒரு அழைப்பு வந்தது. எங்கள் ஜனநாயகப் பேராளிகள் கட்சி தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்சியின் தலைவர், செயலாளரின் விபரங்களைத் தருமாறும் கேட்கப்பட்டது.

அப்போது நான் அழைப்பெடுத்தவர் தொடர்பில் கேட்கையளில் அது சொல்ல வேண்டிய அவசியமில்லை என உரத்த தொனியில் கூறப்பட்டது. அத்துடன் எங்கள் கட்சியின் தலைவர், செயலாளரின் தொடர்பிலக்கம் தருமாறு கூறப்பட்டது.

இதேவேளை அவர் தொலைபேசி உரையாடலின் பண்பினைக் காட்டாவிட்டலும் எங்கள் கட்சிக்கும், எமக்கும் உரித்தான பண்பின் அடிப்படையில் எங்கள் மடியில் எவ்வித கனமும் இல்லாத காரணத்தினால் எங்கள் கட்சியின் தலைவர், செயலாளரின் தொடர்பிலக்கத்தைத் தருவதாகத் தெரிவித்திருந்தேன்.

அதன் பிற்பாடு அவர்களின் பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை விபரம் என்பன கேட்கப்பட்டது. அதற்கு அவைகளெல்லாம் என்னிடம் இல்லை தொலைபேசி இலக்கம் தரப்பட்டுள்ளது.அதனூடாகத் தொடர்பு கொண்டு அவர்களிடமே பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன்.

அதன், பிற்பாடு மிகவும் எச்சரிக்கையானதும், அச்சறுத்தும் விதமானதுமான வார்த்தைப் பிரயோகங்கள் அந்தத் தொலைபேசியினூடாக வந்தது. உங்களை நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் பார்த்துக் கொள்வோம். அழைக்க வேண்டிய இடத்தில் உங்களை அழைத்தால் தான் சரி என்றவாறெல்லாம் மிரட்டல்கள் இடம்பெற்றன.

குறித்த, இவ்விடயம் தொடர்பில் எங்கள் கட்சியின் தலைமைகளுடன் கலந்தாலோசித்துள்ளோம்.இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்பெடுத்தால் எவ்வாறு கதைப்பதென்ற அடிப்படை பண்பு தெரியாமல் கூட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்களா? இவ்வழைப்பானது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருந்துதான் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

எவ்வாறாயினும் அழைப்பு வந்த தொலைபேசி இலக்கம் கொண்டு இச் சந்தேகங்களை நிவர்த்திக் முடியும்.

மேலும்,நாங்கள் போராளிகளாக இருந்து தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து எவ்வித பிணக்குகளும் இன்றி ஒரு அரசியற் கட்சியாக பரினமித்து சுமார் 10 வருடங்களைக் கடந்த நிலையில் இன்னும் இன்னும் இந்த அரசாங்கத்தினாலும், அரச பாதுகாப்பு படைகளினாலும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

கடந்த வருடம் முகநூல் விடயமொன்றினை பூதாகாரமாக்கி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக எமது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டு அண்மையில் தான் விடுவிக்கப்பட்டார்.

அது மட்டுமல்லாது பயங்கரவாதத் தடப்புப் பரிவு, குற்றத் தடுப்புப் பிரிவு போன்றவற்றிலெல்லாம் எங்களை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எத்தனை விசாரணைகள் எத்தனை அச்சறுத்தல்களை சந்தித்த போதும் அவை குறைந்தபாடில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறும் தருவாயில் கூட இங்கை அரசின் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் எல்லையில்லாமல் தொடருகின்றன. முன்பெல்லாம் கடிதங்கள் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவோம். ஆனால் தற்போது தொலைபேசியில் எடுத்து அச்சுறுத்தி தகவல்கள் பெறுமளவிற்கு ஜனநாயகம் மலிந்து விட்டது.

இந்த நாட்டிலே எமது இனத்திற்காக போராடி போராட்டத்தின் வலி அறிந்தவர்கள் எமது போராளிகள். அவர்களின் வலிகளை ஒருபோதும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளாது. புரிந்து கொள்ளப் போவதும் இல்லை. ஆனாலும் வடுக்களை சுமந்துகொண்டிருக்கும் எம்மை மீண்டும் மீண்டும் ரணப்படுத்த வேண்டாம் என்பதை நாங்கள் வன்மையாகத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related Posts